Archive for July, 2021

நீண்ட எதிர்ப்பிற்குப் பிறகு ”வடசென்னை” படம் திரையிக்கு வந்து வரவேற்பையும் சில எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் வெற்றிமாறனின் முந்தைய படங்கள் தந்த நல் அனுபவமும், “வடசென்னை” என்ற தலைப்புமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமாக இருக்கலாம். சினிமா அபிமானிகள் பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முன்னெழுந்துள்ள  விமர்சனங்களை எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது. குறிப்பாக மீனவர் அமைப்புகள், வடசென்னை சார்ந்த எழுத்தாளார்கள், களச் செயல்பாட்டளார்கள், பொதுமக்கள் எனப் பலரும் மிக முக்கிய விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஒரு வெகுஜன சினிமாவின் மீது இப்படியான தீவிர விமர்சனங்கள், அதன் மீது நடைபெறும் பிரதிவாதங்களை ஆரோக்கியமான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். படத்திற்கு ஆதரவான குரல்கள் வழக்கமான சினிமா ரசனையும், வெற்றிமாறனின் திரைமொழி மீதான ஈர்ப்பாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆதே போல் படத்தின் மீதான எதிர்வினைக்கும் சில அடிப்படை சமூக காரணிகள் உண்டு. சமூகவியல் பின்னணியில் படத்தின் பேசு பொருள் குறித்தும், அதன் மீதான எதிர்வினைகள் குறித்து மேலும் சில கருத்துக்களை ஆராய்வோம்.  

படம் குறித்து எழுந்த விமர்சனங்களை சுருக்கமாக சொல்வதானால், சென்னையின் பூர்வக்குடிகளான மீனவர்களைப் படம் தவறாகச் சித்தரிக்கிறது என்பதுதான். குறிப்பாக, மீனவர்கள் கடத்தல், கொலை, கொள்ளை இத்யாதி, இத்யாதிகளைத் தொழில்முறையாக செய்பவர்கள் என்றும், கொச்சையான வார்த்தையை மட்டுமே பேசுபவர்களாக அடையாளப்படுத்துவதோடு, படத்தின் சில காட்சிகள் மீனவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் விமர்சனங்களை மேலெழுந்தது. உண்மையில் படம் வடசென்னையையும், மீனவர் வாழ்வியலையும் பிரதிபலித்ததா என்பது பெரும் கேள்விதான்.

படம் வடசென்னையின் ஒரு ஊர் என்று பொதுவாக பேசாமல் மிகக் குறிப்பாக காசிமேட்டையும், அதில் நாகூரார் தோட்டத்தைக் களமாகவும், மீனவர்களைக் கதை மாந்தர்களாகவும் நேரடியாக அடையாளப்படுத்துகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள்தான் அதிகம். பாரம்பரியமாகக் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களும், கரையிக்கு வந்த படகுகளில் இருந்து மீனை இறக்கி ஏலம் விடும் இடத்திற்கு கொண்டுவரும் வேலையில் தலித்துகளும், பிற சமூகத்தினரும் பங்கேற்கிறார்கள். தற்போது இயந்திர படகுசார்ந்த மீன்பிடி தொழில்களுக்கு பிற சமூகத்தினரும் கணிசமாக ஈடுபட துவங்கியுள்ளனர். மொத்ததில் கடல் சார்ந்து உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி இது.

படம் 80கள், 90கள் மற்றும் 2000 என மூன்று காலகட்டத்தில் இயங்குகிறது.  இதை நேர் வரிசையில் கோர்க்காமல் முன்னுக்குப் பின்னாக கலைத்துபோட்டு கதை சொன்ன விதம் ரசனையானது. துறைமுக வளர்சிக்காக 80களின் இறுதியில் மீனவ கிராமத்தை அகற்ற முயலும் அரசை ஒரு கடத்தல்கார (மீனவ) ரவுடி எதிர்த்து வெல்கிறான். மக்கள் நாயகனாக வளர்ந்த அவனை, அவனது தம்பிகளை (இனத்தை) வைத்தே பலிகொடுக்கிறான் அரசியல்வாதி. துரோகிகளான தம்பிகள் பெரும் தாதாக்களாக உருவெடுக்கிறார்கள். மீண்டும் ஊரை அழிக்க வரும் அடுத்த திட்டத்திற்கு ஆதரவாக மாறுகிறார்கள். முன்பு ஊரை காப்பாற்றிய நல்ல ரவுடியின் இடத்தை அவரால் அரவணைக்கப்பட்ட இளைஞன் நாயகனாக உருவெடுத்துக் காப்பாற்ற முற்படுகிறார். இவர் எப்படி ஊரை காப்பற்றபோகிறார், என்பதுதான் வடசென்னையின் அடுத்த இரண்டு பாகங்களாம்.

”வடசென்னை” படத்தை மதிப்பிடுகையில் அது மீனவர்களையும், வடசென்னை என்ற அடையாளத்தையும் காட்சிப்படுத்திய விதம் விமர்சனத்திற்குரியது என்ற போதிலும் படத்தை அவ்வளவு எளிதில் நிராகரித்துவிட முடியாது.   காரணம், இதுவரை முறையாகப் பேசப்படாத வடசென்னை மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பும், வளர்ச்சியின் பெயரால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றி அழுத்தமாக பேசுவதே படத்தின் முக்கிய தடம். இதுவரை யாரும் தொடாத சில புள்ளிகளை வெற்றிமாறன் தொட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். இதற்காகக் கள ஆய்வும் செய்துள்ளார் என்பதை உணர முடிகிறது. பாரம்பரியமாக வாழும் இடத்தில் இருந்து வளர்ச்சிக்காக வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள். அவர்களைக் காப்பாற்றிய/காப்பாற்றும் கதாநாயகர்கள் தான் கதையின் ஆதரம் என புரிந்துகொண்டால், இப்படத்தை வடசென்னைவாசிகள் மட்டுமல்ல, சென்னையின் சேரிகளில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் மக்கள் அனைவரின் வாழ்வையும் பிரதிபலிக்கும் படமாக கொள்ளலாம். ஏன் வளர்ச்சியின் பெயரால் தன் சொந்த நிலத்தில் இருந்து புடிங்கியெரியப்படும் அனைத்து மக்களின் வாழ்க்கை வலியையும் பிரதிபலிக்கும் படமாகவும் கருதலாம். மாபெரும் அரசியல் படைப்பாகவும் கருதலாம். ஆனால், படம் இந்த ஆதாரப் புள்ளியை மையமிட்டு இயங்காமல், விலகிச் சென்று தாதாக்களின் உலகை பற்றியே பேசுவது தான் சோகம். எந்த மக்களுக்குச் சாதகமாக படத்தின் கதை பேசுகிறதோ, அந்த மக்களின் எதிர்ப்பைப் படம் எதிர்கொள்வதற்குக் காரணம் வழக்கான ரவுடி பிராண்ட் காட்சிகளை மையமிட்டே பெரும்பகுதி கதையை நகர்த்தியதுதான்.

படத்தின் 80 சதவிகிதம் காட்சிகளாக இருப்பது ரவுடிகளின் மோதல், கொலை, பலிவாங்கல், தொழில்போட்டி பற்றியது மட்டுமே. 20 சதவிகித படம் மட்டுமே நில அரசியலைப் பற்றி பேசுகிறது. இந்த 80 சதவிகித படத்தில் தான் மீனவர்களும், வடசென்னைவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கிறது. படத்தில் எந்த உள்ளடக்கத்திற்கும், கதாப்பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. ஆனால், வெற்றிமாறன் இப்படம் குறித்த பேட்களில் ”இது gangsters பற்றிய படமில்லை, வடசென்னையின் ஒரு சிலரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன்” என்றுதான் கூறியிருந்தார். ஆனால் அது வழக்கான சினிமா ரவுடிகளின் வாழக்கையைதான் பிரதிபலித்ததே தவிர மக்களையல்ல.

மீனவர் வாழ்வியலைப் பிரதிபலிக்கிறதா??

படம் ஏதேனும் வகையில் வடசென்னை வாழ்க்கையையோ, மீனவர்களையே பிரதிபலிக்கிறதா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிமாறனின் முந்தைய படங்களில் உள்ள நேர்த்தி இப்படத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இனவரைவியல் கூறுகளை முழுமையாக அசட்டுதனமாக கையாண்டுள்ளார். மீனவர்கள் என்ற பெயரில் படத்தில் வரும் சித்தரிப்பு எவ்வகையிலும் எதார்த்தத்தின் அருகில் கூட இல்லை. மீன்பிடி தொழிலையோ, கடல் சார்ந்த அவர்களின் வாழ்க்கை முறையையோ, பண்பாட்டுக் கூறுகளையோ எவ்வகையிலும் வெளிப்படுத்தவில்லை. ஒரு கருவாட்டு துண்டைக்கூடக் காட்டாமல் என்ன மீனவர் பற்றிய சினிமா?? அவர்கள் கடலுக்கு செல்வதே பெரிய சரக்கு கப்பல்களில் கொக்கி அடித்துக் கடத்தல் செய்யத்தான் என்பது போல் உள்ளது. ஒட்டுமொத்த ஊரையும் அவ்வாறாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

தலைவர்களின் இறப்புகள் கூட கும்பலகக் கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்தினார்கள் என்ற பதிவு மிகப் பெரிய அபத்தம். இது எதார்த்தம் இல்லை. அண்ணா, எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் இறப்பு மீனவ கிராமங்களில் உள்ளூர் துக்கமாகவே அனுசரிக்கப்பட்டது. ஊரே கவலையில் மூழ்கியது. இதுபற்றி மீனவ கிராமங்களில் உள்ள பெரியவர்களை கேட்டால் கதைக் கதையாக சொல்வார்கள். மீனவர்கள், தங்களை கடற்கறையில் இருந்து அப்புறப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆரின் இறப்பை தன் குடும்பத்தில் ஒருவர் இறந்ததாகவே நினைத்து அனுசரித்த உளவியல் ஆராய வேண்டிய ஒன்று. மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் போது வடசென்னையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடுகள் சூறையாடப்பட்ட கதைகளை வெற்றிமாறன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தக் கலவரத்திற்கு அப்போதைய ஆளும் கட்சிகள் தான் தலைமை தாங்கினவே தவிர, எந்த மக்கள் திரளும் இல்லை. தலைவர்களின் இறப்பு சொந்த ஊருக்குள்ளே களேபரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க, வெளியே சென்று கொள்ளை அடிக்க வழியென்ன. அப்படியான சம்பவம் கடற்கரை பகுதியில் நடந்ததாகத் தகவல் ஏதுமில்லை. படம் பயணிக்க துவங்கும் 80களிலும் சரி, தற்போதும் சரி மீனவர்கள் ஏழைகள் தான். ஆனால் திருட்டு என்பது அவ்வளவு இயல்பான ஒன்றல்ல அவர்களுக்கு. ஒரு மரணத்தை அரசியல்படுத்தி தேசிய கட்சியே பிரியாணி அண்டாவைத் திருடும் சமகாலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, ஒரு பகுதி மக்களை இப்படி அடையாளப்படுத்துவது அவ்வளவு பொருத்தமானதாகவோ, அறமிக்கதாகவோ இல்லை.

படத்திற்கு மறுப்புகளை முன்வைக்கும் தொனியில், வடசென்னையில் ரவுடிகளே யாருமில்லை என்றோ, இங்கு இருப்பவர்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் என்று நியாயப்படுத்தி romanticise செய்யவில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதைப் போல இங்கும் ரவுடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது ஒட்டுமொத்த மக்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படத்தை மீனவர் குறித்தபடமாகவோ, வடசென்னை படமாகவோ எப்படி ஏற்பது. மீனவர் பார்ப்பதற்கு முரடாகவும், எளிதில் கோபப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பதாலேயே அம்மக்கள் அனைவரையும் ரவுடிகள் போன்று பார்ப்பது மேட்டுக்குடி மனநிலை. அந்த மனநிலையை உருவாக்கியதில் சினிமாவிற்கு முக்கிய பங்குண்டு. உப்புகாற்றும், கடின உடல்உழைப்பே அவர்கள் கறுத்த நிறத்திற்கும், வழுத்த உடம்பிற்குமான காரணங்கள். தொழில் ரீதியாக ஒற்றுப்பட்டு இருப்பதாலேயே அனைத்துச் சமூக நிகழ்வுகளிலும் கூட்டாகவே செயல்படுகின்றனர். இந்தக் கூட்டு வாழ்க்கை முறையும், மனோபாவம் சில நேரங்களில் வன்முறைக்கும் வழிவகுப்பதுண்டு. இந்த தொழில்சார் சமூக உளவியலை புரிந்துக்கொள்ளாமல் தமிழ் சினிமா நீண்டகாலமாக இவர்களை வன்முறையாளர்களாக சித்திரத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமா மீனவர் வாழ்க்கையை அறிமுக நிலையில் கூட காட்சிப்படுத்தியதில்லை. மறியான் படம் கூட பாவனை செய்ததே தவிர, அசலாக இல்லை. அதன் இயக்குநர் பரத்பாலா வெளியில் பேசிய விசயங்கள் எதுவும் படத்தில் கொண்டுவரவில்லை. ”படகோட்டி”, ”நீர்ப்பறவை” ஆகியவற்றை பட்டியலிலேகூட வைக்க மனம் வரவில்லை.

தமிழ் சினிமாவில் ரவுடி கதைகள் வணிக சூத்திரமாக பார்க்கப்படுகிறது. எதார்த்தமாய் கதை சொல்பவர்கள் கூட, சாகச உள்ளடக்கத்திற்காக ரவுடி கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன்மூலம் கொலை, கொள்ளைச் சம்பவங்களை நுட்பமாகக் கட்டமைப்பதின் மூலம் பார்வையாளரை உணர்ச்சி பொங்க வைத்து இருக்கையின் நுணிக்கு வரச் செய்கிறார்கள். வணிகத் தேவைக்காக சாகசங்கள் தேவை என்றே வைத்துக்கொள்வோம். மீனவர்கள் தான் கதை மாந்தர்கள் என்றான பிறகு ரவுடியிசம் தொடர்பான காட்சிகளின் மூலம்தான் சாகசங்களை காட்டமுடியுமா என்ன? பிரம்மாண்ட கடலில் மீனவர்கள் செய்யும் தொழிலில் சாகசம் இல்லையா?  கடலைவிட ஆச்சரியமும், பிரமிப்பும் தரும் வேறொன்று உள்ளதா?  அது பொது சமூகத்தைப் பிரமிப்பூட்டும் விசயம் இல்லையா?? அலைமோதும் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு சராசரி நபரிடம் கேட்டால் அவரது உற்சாகம் தெரியும். ”கடலும் கிழவனும்” நாவல் வாசகனுக்கு அப்படியொரு பிரமிப்பை உருவாக்கியது என்றால், அந்தக் கடல் சார்ந்த வாழ்க்கையைக் காட்சிப்படுத்தினால் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். அப்படியொரு படம் எடுப்பது சாத்தியம் தான்.  ஆனால் கள அறிவும், தேடலும், கடின உழைப்பும், தொழில்நுட்பத்தைக் கையாளும் திறுனும் குறிப்பாகச் சரியான அரசியல் பார்வையும் தேவை. ஒருவேலை வெற்றிமாறன் இப்படத்தை மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அசலாகப் பதிவு செய்திருந்தால், ஒரு சிறந்த வணிகப்படமாகவும், சமூக பொறுப்புள்ள சினிமாவாகவும் இருந்திருக்கும்.

சென்னை மொழி படும்பாடு

படத்திற்கு ஆதரவாகப் பேசுபவர்களின் இன்னொரு முக்கிய பதிவு நடிகர்களின் பங்களிப்பும், சென்னை வழக்காறும். ஆன்றியா, ஐஸ்வரியா ராஜேஷ், தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, தீனா, கிஷோர், பாவல் நவகீதன், பவன், ஹரி எனச் சிறந்த நடிகர்கள் பலர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அமீரின் உடல்மொழி அவ்வளவு விரைப்பாக உள்ளது. ஆனால் அது அப்பகுதி மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. தனுஷ் உட்பட அனைவரும் imitate செய்ய முயற்சித்தார்களே தவிர, அவ்வளவு இயல்பாக இல்லை. இவர்கள் எவ்வளவு முயன்றும் சென்னை வழக்காறும் உடல்மொழியும் கைவரவில்லை. நான்கு வில்லன்களில்  ஒருவராக வரும் தீனா மட்டுமே இயல்பான நடிப்பால் (இருப்பால்) மனதில்  நிற்கிறார். காரணம் தீனாவின் உடல்மொழியும், பேச்சு வழக்கும் அசலானது. பொதுவான சினிமா பிம்பங்களுக்கு ஆட்படாமல் தீனாவையே அமீர் பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் உண்மையில் வெற்றிமாறன் தன் கதைக்கு நியாயம் செய்து இருக்கலாம். அவரைப் போன்றே பாவல் நவகீதன், பவன், ஹரி ஆகியோரும் இயல்பாய் தெரிகின்றனர். அதே போன்று சமுத்திரகனியின் தம்பியாக வருபவர் நடிப்பும் படு இயல்பு.

அசல் சென்னை படமாக வருவதற்கு இயக்குநரோ, நடிகர்களோ முழுமையாக மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது. வெற்றிமாறன் தன் முந்தைய “ஆடுகளம்” படத்தை மதுரைப் படைப்பாக வடித்தெடுக்க சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதில் பேட்டைகாரனாக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் நடித்து இருந்தார். அவருக்கு மதுரை வழக்கில் பின்னணி குரலை இராதாரவி கொடுத்திருந்தார். அவரது பாத்திரம் அவ்வளவு வரவேற்பைப் பெற காரணம் ஜெயபாலனின் வித்தியாச தோற்றமும், ராதாரவியின் குரலும்தான். ஆதேபோல் கிஷோருக்கு சமூத்திரக்கனி குரல் கொடுத்து இருந்தார். இவ்வாறான முயற்சிகளே முக்கிய கதாப்பாத்திரங்களை மதுரை களத்தோடு இணைத்தது. துணை பாத்திரங்களும் மருத பாசையில் அசத்தியிரு்தனர். ஆனால், இதுபோன்ற முயற்சிகள் எதுவும் வடசென்னையில் காணமுடியவில்லை. நடிகர்களை அவர்கள் குரலிலே சென்னைத் தமிழில் பேசவைத்திருப்பது, அப்பப்பா!! நாராசம். அதிலும் சமுத்திரக்கனி சென்னை மொழி பேசுவைத்தெல்லாம் கொடுமையின் உச்சம். மதுரை களத்திற்கு நியாயம் செய்ய மெனக்கெட்ட இயக்குநர் ஏன் சென்னை களத்திற்கு நியாயம் செய்யவில்லை?? தேங்காய் சீனிவாசனும், கமலஹாசுனும் கட்டிச்சுதுப்பிய சென்னை மொழிதானே! நாமும் கொஞ்சம் செஞ்சிவைப்போம் என்று நினைத்தார்களோ என்னவோ!(?).  பொதுவாகச் சென்னை என்ற அடையாளம் கேட்பாடற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. அதை எவ்வளவு கீழ்மையாகவும் பேசலாம், அடையாளப்படுத்தலாம். யாரும் சண்டைக்கு வரப்போவது இல்லை என்ற ”taken for granted approach” என்ற பொது மனப்பான்மையின் வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள முடிகிறது.  

அதே போல் ”ங்கோத்தா, ங்கோம்மா…” என்றாலே அது சென்னை வழங்கு ஆகிவிடாது. கொச்சையாகப் பேசுவதுதான் சென்னை மொழி என்று புரிந்துகொள்வதும், அடையாளப்படுத்துவதுமே ஒருவகை மேட்டுக்குடி மனோபாவம் தான்.  கெட்டவார்த்தை என்று மேட்டுக்குடிகள் அடையாளப்படுத்தும் வார்த்தைகள் அம்மக்களின் பேச்சில் வெளிப்படும் போது தவறாகத் தெரிவதில்லை. ஆனால் சென்னை பண்பாட்டோடு கலக்காமல் இருப்பவர்கள் அத்தகைய வார்த்தைகளை வழிந்து பேசும் போதுதான் தவறாக தெரிகிறது. வடசென்னை படத்தில் கூட ”ஐஸ்வரியா” கொச்சையாகப் பேசும் வசனங்கள் உள்ளது. ஒரு பெண்ணை இப்படிப் பேச வைக்கலாமா என்று கேள்வி அபத்தமானது. அதே வேலையில், உண்மையில் சென்னை பெண்கள் அவ்வாறு பேசுகிறார்களா என்றால்? பொதுவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேட்டுக்குடிகள் பார்வையில் சேரி, குப்பங்களில் வாழும் மக்கள் மீதான தவறான புரிதல் அது. குறிப்பாக மீன் விற்பது, பூவியாபாரம், தெருவோர சாப்பாட்டு கடை, வீட்டுவேலை என உடல் உழைப்பில் ஈடுபடும் பெண்கள் பொதுவெளியில் சுரண்டலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொள்ளும் அறனே இந்த ”கெட்டவார்த்தைகள்”. இந்த உளவியலைப் புரிந்துகொள்ள மேட்டுக்குடிகளுக்கு வாய்ப்பில்லைதான். இப்பெண்கள் தன் சொந்த வீட்டில், ஊரில் எப்படி உரையாடுகிறார்கள் என்று இந்த மேட்டுக்குடிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த விளக்கங்களுக்கெல்லாம் மீறி சென்னை பாசையில் மட்டும்தான் கெட்டவார்த்தைகள் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அனைத்து எல்லா வட்டார வழக்குகளிலும் கெட்டவார்த்தைகள் நிறைந்துள்ளது. ஆனால், சென்னை மீது மட்டும் இந்த காழ்ப்புணர்வு ஏன்?? பச்சையான சொல்வதானால், சென்னை மொழியில் ”ங்கோத்தா” என்றால் கேவலம். ஊர்  பாஷையில் ”வக்காலி” என்றால் புனிதமா?? பீ என்றால் நாறும்! Shit என்றால் மணக்கும்!! அடபோங்கப்பா!!

தப்பெண்ண அரசியல்

தமிழ் சினிமா வடசென்னை வாசிகளைத் தொடர்ந்து ரவுடிகளாகவே தொடர்ந்து சித்தரிக்கிறது. கறுப்பர் நகரத்தின் உழைப்பாளி மக்களின் மீதான தப்பெண்ணத்தை தொடர்ந்து விதைக்கிறது. தமிழ் சினிமாவில் நிறைந்து கிடக்கும் stereotypeகளான ”ஆமேரிக்கா மாப்பிள்ளை”, ”இறுதிக்காட்சியில் வந்து arrest him என்று சொல்லும்  காவல் அதிகாரி”, ”ஓவர் நைட் ஒபாமா (தொழிலதிபர்)” இப்படி பலவும் இன்று கிண்டலுக்கு உரியதாக மாறிவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் காலம் துவங்கி இன்று வரை இந்தக் கபாலி, குமாரு, முனியன், பீட்டர்கள் மட்டும் ரவுடிகளாகவே தொடர்கின்றனர்.  ”ரவுடி சினிமா” வணிக யுக்தியாக மாறிவிட்ட சூழலில் இந்தத் தப்பெண்ண அரசியல் மேலும்  கூர்வையடைகிறது. ஒவ்வொரு படத்திலும் புதிதாக எதையோ சொல்லவிட வேண்டுமென்ற அரிப்பில் இன்னும் ஆழமாக ரூம் போட்டு யோசித்து புதிய வன்மங்களைக் கண்டுபிடித்து விதைத்துக்கொண்டே செல்கிறார்கள் (சமீபத்திய உதாரணம் ”விக்ரம் வேதா” திரைப்படம்). செய்நேர்த்தியில் புதுமையை கையாள்வதால் சில படங்கள் வணிகரீதியாக வரவேற்பைப் பெரும்போது, சில டிரெண்டிங் வியாதிக்காரர்கள் அதையே தின்று மீண்டும் வாந்தியெடுக்கப் போட்டியிடுகின்றனர்.

இப்படித் தொடர்ந்து செய்யப்படும் பண்பாட்டு தாக்குதலுக்கு எதிரான குமுறல்கள் தான் ஒட்டுமொத்தமாக வடசென்னை படத்தின் மீது வெளிபட்டுள்ளது.  இது வெறும் வெற்றிமாறன் மீதான தனிப்பட்ட விமர்சனமல்ல. தமிழ் சினிமா தொடர்ந்து செய்யும் தவறுக்கு எதிரான வெளிப்பாடாக பார்ப்பதே சரியாக இருக்கும். மற்ற வணிகப்படங்களுக்கு எதிராக விமர்சிக்க கிளம்பாதவர்கள், குறிப்பாக இப்படத்தை விமர்சிக்கப்பதற்கான காரணம் வெற்றிமாறனின் யாதார்தத்திற்கு நெருக்கமான சினிமா மொழியும், பொதுவில் அவரது சமூக அரசியல் நிலைபாடும்தான் என்று எண்ணுகிறேன். அவரது சினிமா மொழி பார்வையாளர்களை இயல்பாக convince செய்யும் என்பதால், படத்தில் காணப்படும் காட்சிகள் அனைத்தும் உண்மையானது என்றே நம்ப வைக்கும் என்ற அடிப்படையில் வடசென்னை வாசிகளின் எதிர்ப்பை புரிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர் தொழிலாளிகள் எப்படி சங்தேகிக்கப்பட்டு குற்றச்சமூகமாகப் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் மனிதஉரிமை எப்படி மீறப்படுகிறது. இந்த அரசு இயந்திரம் அவர்களை எப்படி அச்சுருத்துகிறது என்பதை மிக அழுத்தமாகப் பேசிய ”விசாரணை” யை தந்த வெற்றிமாறன் தான் ”வடசென்னை”யையும்  தந்திருக்கிறார் என்பது எவ்வளவு அப்பட்டமான முரண்பாடு.

”வடசென்னை படத்தை தடைசெய்ய வேண்டும்”, ”இனி படம் எடுக்காதீர்கள்” என்று அதீதமாக சிலர் பேசினாலும், பெரும்பான்மை எதிர்ப்பாளர்கள் புரிதலை நாடியே நின்றனர். தென்னிந்திய மீனவர் சங்கத்தின் அறிக்கையும், வடசென்னை சார்ந்து  எழுதிவரும் எழுத்தாளர்களின் பதிவுமே இதற்குச் சான்று.  முகநூலில் இளைஞர்கள் சிலரும் தங்களை எதிர்வினையை அழத்தமாக பதிவுசெய்திருந்ததைக் காணமுடிந்தது. அதில் ஒரு பதிவில் ”தான் படித்தப் பட்டாதாரியாக, தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றினாலும், தான் வசிக்கும் வியாசர்பாடி என்ற அடையாளமே தனக்கு உரிய வேலை, அங்கிகாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்துவதாகவும், வடசென்னை எங்கு இருக்கிறது என்றே தெரிவாதவர்கள் தான் இப்படிச் செயல்படுவதாகவும், சினமாவே இக்கருத்தை வலுவாக்கியதாகவும்” அழுத்தமாக எழுதியிருந்தார்.  ”சினிமா உருவாக்கிய பொதுக்கருத்தை போல் வடசென்னை ரவுடிகள் நிறைந்த பகுதி இல்லை என்றும், இங்கும் படித்தவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை வல்லுனர்கள் உள்ளதாக, அதைப் புரிந்து கொண்டு இனியும் இதுபோன்ற தப்பெண்ணத்தை காட்சிப்படுத்த வேண்டாம்” என்றும் பதிவுசெய்திருந்தார். அந்த இளைஞனின் மனபதிவு எளிதில் புறங்தள்ளக்கூடிய ஒன்றல்ல.

சினிமா மீதான எதிர்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில்களை சினிமா தரப்பினர் இதுவரை நேர்மையாக எதிர்கொண்டதில்லை. ஆனால், வெற்றிமாறன் இதில் வேறுபட்டு நிற்கிறார். வடசென்னை மீனவ தலைவர்களில் ஒருவரான தயாளன் அவர்களை அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அதன்பொருட்டு மீனவர்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நீக்குவதாகவும் காணோளியாக ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் ”எங்கள் சமூக அரசியல் பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது இல்லை, படத்தின் காட்சிகள் மீனவ மக்களின் மனதை புண்படு்த்தியிருந்தால் பகிரங்கமன்னிப்பு கேட்பதாக” அதில் கூறியிருந்தார். மீனவர்களின் விமர்சனமும், அதற்கு வெற்றிமாறன் முகம்கொடுத்த விதமும் பாராட்டுக்குறியது.

இப்படம் வடசென்னை என்ற பெயருடன் அது குறிக்கும் மக்களை இழிவுப்படுத்தியதாக கருதப்பட்டாலும், முழுமையில் குறிப்பிடப்பட்டிருப்பது மீனவ மக்களைத்தான். அமைப்பு ரீதியாக சிலர் இப்படத்திற்கு உரிய விமர்சனத்தையும், பதிலடியையும் கொடுத்திருந்தாலும், கருத்தியல் ரீதியான எதிர்வினைகள் மீனவ மக்கள் சார்பாக வெளிப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் தலித் மக்கள் மத்தியில் நடைபெற்ற அரசியல்படுத்துதல் முயற்சிகளும், கருத்தியல் முதிர்ச்சியும், அணித்திரட்டல்களும் மீனவ மக்கள் மத்தியில் நடைபெற்றவில்லை என்பதைச் சுயவிமர்சனத்துடன் அம்மக்களும், அவர்களை அணிதிரட்டுபவர்களும் உணர வேண்டும். அதிகாரம் ஏதும் இல்லாத சூழலில் அரசியல் கல்வி, சமூக ஒற்றுமை ஆகியவற்றை முன்னிருத்தி தலித் இயக்கங்கள் தலித் மக்களை எழுச்சியடைய செய்து சமூக முன்னேற்றத்திற்குத் தளம் அமைத்துள்ளது. அவ்வாறான முன்முயற்சிகள் மீனவர் மத்தியில் ஏற்பட வேண்டும். மீன் தொழிலாளர் என்ற முறையிலும், புறக்கணிக்கப்படும் சமுதாயம் என்ற அடிப்படையிலும் அவர்களுக்கான வளர்ச்சிக் கோரிக்கைகளை முன்னிருத்தி மீனவர்கள் அமைப்பாக திரள வேண்டும் என்பதே தற்கால சூழல் சொல்லும் பாடம்.