Archive for February, 2013

vis wall
ஒரு தீவிர ரசிகனாக, கமலஹாசனை சிறந்த நடிகராக, இயக்குனராக, பல்துறை திறமைப் படைத்த கலைஞனாக, சினிமாவின் தொழிற்நுட்பம் அறிந்த வல்லுனராக பார்க்கும் எல்லைக்கு அப்பால், அவரை பகுத்தறிவாளனாக, முற்போக்குவாதியாக, இடதுசாரி சிந்தனையாளராக பாவிப்பவன் நான். மேற் கூறிய விசயங்களில் தமிழ் சினிமாத்துறையில் கமலுக்கு ஈடு இணையாக வேறுயாரும் இல்லை என்பதே என் ஆளமான கருத்தாக இருந்து வருகிறது. கமலஹாசன் மீதான எனது ஈடுபாட்டின் காரணமாகவே விஸ்வரூபம் படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதால், ஆந்திரா சென்று (பிப்ரவரி-2அன்று) பார்த்து வந்தேன். சென்னையில் இருந்து ஆந்திர எல்லை பகுதிகள் அருகில் உள்ளதால், இது ஒரு பெரிய காரியமாக எனக்கு தோன்றவில்லை. பல காரசாரமான சமூக அரசியல் விவாதங்களுக்கு பிறகு படம் பார்த்ததால், படத்தை சமூக அரசியல் ரீதியாகவே அணுகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு முற்போக்கு கலைஞனின் ரசிகனாக படத்தை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்ப்பது இயல்பானது என்றே நினைக்கிறேன்.

Kamal+Haasan+4553449கமலஹாசன் படத்திற்க்கென்று எப்போதும் ஒரு அரசியல் இருக்கும். அவர் அரசியல் கட்சி சார்பற்றவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாளும், அரசியல் சார்பற்றவராக என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. அவரது படைப்பும், பேச்சும் அரசியலற்றதாக இருந்ததில்லை. குறிப்பாக அவரது சொந்த முயற்சியில், தயாரிப்பில் உருவான அனைத்து படங்களும் ஏதேனும் ஒரு சமூக அரசியல் விவாதத்தை மையமிட்டதாக இருந்துள்ளது. அவரது அரசியல் ரீதியான தொடர் விவாதங்களே இப்போது விஸ்வரூபதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரை அணித் திரள வைத்துள்ளது எனலாம். விஸ்வரூப்பதை ஒரு திரைப்படம் என்ற அளவில் விமர்சனம் செய்வதைவிட, கமலஹாசன் குறித்த எனது புரிதலில் இருந்தும், படவெளிவருவதே தடைசெய்யப்பட்டு, அதன் மீது கூறப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களின் பின்னனியில் இருந்து விஸ்வரூபம் படத்தை நான் எவ்வாரு புரிந்து கொண்டுள்ளேன் என்ற அடிப்படையிலேயே ஆராய முற்படுகிறேன்.

விஸ்வரூபத்தில் கதையென்று நீட்டிச் சொல்ல ஏதுமில்லை, நான்கு வரியில் சொல்லிவிடலாம். வழக்கமாக ஹாலிவுட் படங்களில் அதன் நாயகர்களான சி.ஐ.ஏ உளவாளிகள் உலகநாடுகளை கம்யூனிச பிசாசிடமும், இஸ்லாமிய பயங்கரவாதத்திடமும், அந்நிய கிரகத்தில் இருந்து வரும் அமானுசிய சக்திகளிடம் இருந்தும் காப்பற்றி வந்தனர். இப்போது அந்த வேலையை நமது உலகநாயகன் தமிழ் (இந்திய) சினிமாவில் செய்திருக்கிறார். கமலஹாசன் இந்திய ரகசிய உளவாளியாக உலக வல்லரசான அமெரிக்காவையே தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதுதான் விஸ்வரூபமாம்.

Viswaroopam techniபடத்தின் சிறப்பம்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் அது தொழிற்நுட்பம் முயற்சிகள்தான். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக காட்சியும் சப்தமும் உள்ளது. ஆப்கான் கிராமங்களையும், போர் சூழலையும் காட்சிபடுத்திய விதம் அருமையாக உள்ளது. கமல் படங்களுக்கு என்று ஒருவிதமான மொழியுண்டு, அதை முற்றிலுமாக தவிர்த்திருப்பதை தெளிவாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாக்களின் மொழியே சிறிதும் இல்லாமல் படம் முழுமையும் ஹாலிவுட் மொழியிலேயே உள்ளது. கதை சொல்லப்படும் சூழலின் பின்புலம் குறித்த எவ்வித மாற்று சிந்தனைக்கும் இடம் தராமல், பார்வையாளர்களை ஒரே நேர் கோட்டில் காட்சிகளோடு பயணிக்க வைத்துள்ளனர். அதன் மூலம் படம் முன்வைக்கும் சமூக அரசியல் லாவகமாக ஏற்றுக்கொள்ளவைத்துள்ளனர்.

படத்தின் கதைக்களமாக அமெரிக்கவையும், ஆப்கானையும் வைத்துள்ளனர். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்பு ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஆப்கானில் அமெரிக்க-நேட்டோ படையின் கொலைவெறி தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தை படம் பதிவு செய்கிறது. ஆப்கானில் அய்கொய்தா அமைப்பின செயல்பாடுகள், அங்கு வாழும் மக்களின் பிரச்சனைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, குழந்தைகளை கட்டாயமாக ஜிகாத் போராளிகளாகவே வளர்ப்பது, ஆங்கிலம் பயில்வதை தடுப்பது, சமூக வளர்ச்சியற்ற நிலை என ஆப்கான் அல்கொய்தா குறித்த பல விதமான பதிவுகளை படம் முன்வைக்கிறது. 111111துப்பாக்கி-பீரங்கிகளின் சத்தத்திற்கு இடையில் அம்மக்களின் வாழ்வை ஜிகாத் எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை பதிவு செய்துள்ளார். அல்கொய்தா அமைப்பினர் தங்கள் மதக் கோட்பாடுகளை எவ்வளவு பிடிவாதத்துடன் பின்பற்றுகிறார்கள் என்பதில் இருந்து, மத அடிப்படைவாதிகளை தோலுரித்து காட்டுவதில் கமலின் ஆர்வத்தையும், நேர்த்தியாக அதை எடுத்துரைக்கும் முறையினையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது.

iraqtorturecdogsமறுபுறம் பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஆப்கானை தும்சப்படுத்திய அமெரிக்க நேட்டோ இராணுவ படைகளின் செயல்பாடுகளையோ, அவர்கள் செய்த அட்டூழியங்களையோ காட்சி படுத்தாமல் போனது அரசியல் ரீதியாக அறுவருப்பான செயல் என்று சுட்டிகாட்ட வேண்டியுள்ளது. மேலும் ஒரு காட்சியில் நேட்டோ இராணுவம் ஆப்கான் கிராமத்தில் எலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தும் போது, குண்டு வீசப்பட்ட வீட்டில் இருந்து பெண்களும், குழந்தைகளும் அலறியடித்து வெளியேறுவதை பார்க்கும் படை வீரன் வருந்துவது போல காட்சிபடுத்துவது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கட்டமைப்பை உருவாக்குவதாக தோன்றுகிறது. அமெரிக்க படையில் ஒருசில நல்ல மனிதர்கள் இருக்க கூடாதா, அவர்களை கமல் காட்டியுள்ளார் என சிலர் கூறலாம். ஆனால் ஆப்கான் மட்டுமல்ல எந்த நாட்டிலும் போர் சூழலில் அப்படி ஒரு மனிதாபிமான செயலை இதுவரை பார்த்ததில்லை என்பதே நிதர்சன உண்மை.

kamalin islamஆப்பகானின் அல்கொய்தா குறித்து விவரிப்பதில் ஆா்வம் காட்டிய கமலஹசான், ஆப்கான் வரலாற்றில் கம்யூனிஸ்ட்கள் அழிக்கப்பட்டதுஎப்படி? தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளின் தோற்றம் மற்றும் அவற்றை உருவாக்கியதில் அமெரிக்காவின் பங்கும், நோக்கமும் என்ன? என எதைபற்றியும் காட்சிப்படுத்த ஆர்வம் கொள்ளவில்லை. இஸ்லாமியர்களை குற்றச்சமூகத்தினராக அடையாளப்படுத்துவதில் அமேரிக்காவின் பங்கென்ன? அமெரிக்கா இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமிய நாடுகளையும் எதிர்ப்பதால் அடைந்து வரும் லாபம் என்ன? எண்ணெய் அரசியல் என்றால் என்ன? என்பதை பற்றி கமலஹாசன் அறியாதவரல்ல. அறிந்தும் அதனை சிறிய அளவில் கூட சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் என்றால், அதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.
us impe
ஒரு முற்போக்குவாதி உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசினால், கூடவே அதற்கு காரணமான அமேரிக்க ஏகாதிபத்தியம் குறித்தும் பேசியே ஆகவேண்டும். இந்திய அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசினால், கூடவே இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து பேசியே ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் அது அரைகுறை பார்வையாகவும், ஒருதலைபட்சமான அணுகுமுறையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது விவாதிப்பவரை ஒரு முற்போக்குவாதியாக கருதமுடியாது. மேற் கூறிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் கமலஹாசனை முற்போக்கு முகாமில் இருந்து தள்ளிவைக்க வேண்டுய சூழலை விஸ்வரூபம் ஏற்படுத்தியுள்ளது.

kamal-as-marudhanayagamஇப்படம் பார்த்த பிறகு என்னை பொறுத்தவரை இப்படத்தை இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை சிறுமைபடுத்தியதாக எதிர்த்திருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாம் மார்கத்தை எந்த இடத்திலும் கமலஹாசன் சிறுமைப்படுத்தியதாக உணரமுடியவில்லை. அல்கொய்தா, தாலிபான் போன்ற அமைப்புகளின் பிற்போக்கு மற்றும் பயங்கரவாத அரசியலை தோலுரிப்பதை இஸ்லாதிற்கு எதிரானதாக என்னால் எண்ணமுடியவில்லை. இஸ்லாமியருக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு வரும் பண்பாட்டு ஒடுக்குமுறையை ஒரு இஸ்லாமியனால் மட்டுமே உணரமுடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அது உணர்ச்சி ரீதியான புரிதல் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இப்படம் இஸ்லாமியருக்கு எதிரானதாக கருதவாய்ப்புள்ளதை கமலஹாசனும் அறிவார் போல. இப்படி முன்னெழும் முரண்பாட்டை ஈடுசெய்யவே கதையின் நாயகனை இஸ்லாமிய கதாபாத்திரமாக வைத்துள்ளார். என்னை பொறுத்தவரை விஸ்வரூபத்தை மத அடிப்படையில் எதிர்ப்பதை விட அதன் ஏகாதிபத்திய ஆதரவு நிலைபாடே கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது.

HindutvaActivistதனது சினிமாக்களில் மனிதநேயத்தை முன்னிருத்தி மதவாதம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலை பதிவு செய்த கமலஹாசன் இப்போது விஸ்வரூபத்தில் களம் மாறி நிற்பது விமர்சனத்திற்குரியது. அவரது ஹாலிவுட் கனவு நிறைவேறுவதற்கான கதவை தட்டி திறக்கவே விஸ்வரூபம் எடுக்கப்பட்டதாக பலர் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை முன்வைக்கும் படங்களை எடுப்பதற்காகத்தான் ஹாலிவுட்டிற்கு கமல் போகிறார் என்றால், கமலஹாசனிடம் நாம் சொல்ல வேண்டியது “நீங்கள் உலகநாயகனாக ஆக வேண்டாம், உள்ளுர் நாயகனாகவே இருங்கள்“ என்பதுதான்.